Latestமலேசியா

மலேசியாவின் மிகச் சிறந்த 50 மருத்துவமனைகளில் ஒன்றாக HKL தேர்வு; Dr ஹரிகிருஷ்ணா தலைமைத்துவத்தின் சான்று என Dr லிங்கேஷ் புகழாரம்

கோலாலம்பூர், மே-20 – மலேசியாவின் 50 மிகச் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 8 அரசாங்க மருத்துவமனைகளும் இடம் பெற்றிருப்பது, அனைத்துலக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவற்றில் HKL எனப்படும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை நான்காமிடத்தைப் பிடித்து முத்திரைப் பதித்துள்ளது.

மலேசியாவின் அந்த மிகப் பெரிய பொது மருத்துவமனையை உலகளாவிய அங்கீகாரத்திற்கு இட்டுச் சென்றதில், HKL இயக்குநர் பேராசிரியர் டத்தோ Dr ஹரிகிருஷ்ணா ராகவன் நாயரின் தலைமைத்துவத்திற்கு பெரும் பங்குண்டு என, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாசலம் புகழாரம் சூட்டினார்.

இது மலேசிய சுகாதார வரலாற்றில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கும் ஒரு மகத்தான சாதனை.

இந்த கௌரவம் ஒரு தேசிய வெற்றி மட்டுமல்ல, மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பெருமைமிக்க தருணமாகும் என லிங்கேஷ் வருணித்தார்.

டத்தோ Dr ஹரிகிருஷ்ணாவின் முன்மாதிரியான சேவை, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நமது சமூகம் கொண்டு வரும் வலிமை, மீள்தன்மை மற்றும் சிறப்பை பிரதிபலிக்கின்றன.

அவரது தலைமையின் கீழ், தரமான மருத்துவ சிகிச்சை, மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பராமரிப்புச் சேவை ஆகியவற்றில் HKL தொடர்ந்து புதிய தரநிலைகளை அடைந்து வருகிறது.

பொது சுகாதாரத்திற்கான அவரது அர்ப்பணிப்பு HKL-னின் நற்பெயரை உயர்த்தியுள்ளதோடு மலேசியாவை உலக சுகாதார வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்துள்ளது.

Dr ஹரிகிருஷ்ணாவின் வெற்றி இளம் இந்திய மலேசியர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், விடாமுயற்சி மற்றும் ஆர்வத்துடன், உலக அரங்கிலும் நாம் சாதிக்க முடியுமென்பதை நினைவூட்டியுள்ளது என Dr லிங்கேஷ் மேலும் கூறினார்.

அமெரிக்காவின் பிரபல வார சஞ்சிகையான Newsweek வெளியிட்ட அப்பட்டியலில், HKL-லுக்கு அடுத்து இடம் பெற்றுள்ள அரசாங்க மருத்துவமனைகளில், PPUM எனப்படும் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம், சவாக் மருத்துவமனை, புத்ராஜெயா மருத்துவமனை, பினாங்கு மருத்துவமனை உள்ளிட்டவையும் அடங்கும்.

நாட்டிலேயே மிகச் சிறந்த 3 மருத்துவமனைகளாக முறையே சன்வே மருத்துவ மையம், கோலாலாம்பூர் Gleneagles மருத்துவமனை, சுபாங் ஜெயா மருத்துவ மையம் பட்டியலிடப்பட்டுள்ளன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!