
மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு கண்ட குறளிசைக் காவியம் – 7-ஆவது தொகுப்பு
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-8,
தமிழகத்தைச் சேர்ந்த இளம் இசைக் கலைஞர்களான லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோர் தயாரித்துள்ள ‘குறளிசைக் காவியத்தின்’ 7-ஆவது தொகுப்பு மலேசியாவில் பிரமாண்டமாக வெளியீடு கண்டுள்ளது.
TASLY நிறுவனத்தின் ஆதரவில் T-Lax Avenue ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, பெட்டாலிங் ஜெயா, BAC கோபுரத்தின் The Omnia ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை மாலை 6 மணி தொடங்கி நடைபெற்றது.
வணக்கம் மலேசியாவை அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடகமாகக் கொண்ட இந்நிகழ்வுக்கு TASLY நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரவி பக்கிரிசாமி தலைமைத் தாங்கினார்.
லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி இருவரும் 1,330 குறட்பாக்களையும் இசையுடன் பாடி இசையுடன் பொருள் கூறி இந்தக் குறளிசைக் காவியத்தை வெளியிட்டுள்ளனர்.
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் இந்த குறளிசை காவியம் படைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் தொகுப்பின் வெளியீடு கடந்தாண்டு செம்டம்பரில் தமிழகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், ஏழாவது தொகுப்பு மலேசியாவில் வெளியீடு கண்டது.
சிறப்பம்சமாக மலேசியாவைச் சேர்ந்த 18 பாடகர்களும் இதில் பாடியுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது குறித்து ஏற்பாட்டாளர் திலா லக்ஷ்மண் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இந்த ஏழாவது தொகுப்பு ஒன்பது பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகங்களிலும் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றை YouTube-பிலும் கேட்கலாம் என திலா சொன்னார்.
தங்களின் இம்முயற்சிக்கு மலேசியத் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு பெருமையளிப்பதாக, லிடியன் நாதஸ்வரமும் அமிர்தவர்ஷினி இருவரும் கூறினர்.
இந்த இசை வெளியீட்டில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குறளிசைக் காவியத்தைக் கேட்டு இன்புற்றனர்.



