
புத்ராஜெயா, ஏப்ரல்-22, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீன பயணிகளுக்கான விசா விலக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.
சீன அதிபர் சீ சின் பிங்கின் அண்மைய மலேசியப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட 32 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றென, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அந்த ஐந்து ஆண்டுகள் முடிந்ததும், மேலும் ஐந்தாண்டுகளுக்கு அதனை நீட்டிக்கும் தேர்வு அவ்வொப்பந்தத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.
அதே ஐந்தாண்டு காலத்திற்கு மலேசிய குடிமக்களுக்கும் விசா இல்லாத நுழைவை சீனா வழங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நடப்பு ஒப்பந்தம் இவ்வாண்டு இறுதியில் காலாவதியாவதால், புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த விசா விலக்கு, சீன சுற்றுப் பயணிகள் மலேசியாவில் 90 நாட்கள் வரை தங்க அனுமதிக்கிறது;
சீனாவும் மலேசியர்களுக்கு இதேபோன்ற ஏற்பாட்டை வழங்குகிறது என்றார் அவர்.
சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான அரசாங்கத்தின் விசா தாராளமயமாக்கல் கொள்கை, 2023 டிசம்பர் 1 முதல் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கு வருகைத் தரும் சுற்றுப் பயணிகளில் சீன நாட்டவர்களே முதலிடம் வகிக்கின்றனர்; அதையடுத்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் உள்ளனர்.
இவ்வாண்டு இதுவரையில் மட்டும், சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 900,000 சுற்றுப் பயணிகள் மலேசியா வந்துள்ளனர்