மலேசிய பிரஜை தட்சினாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை

சிங்கப்பூர்,செப்டம்பர்-22,
44.96 கிரேம் Diamorfin போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியப் பிரஜை கே.தட்சினாமூர்த்தி ( Datchinamurthy ) வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளார்.
தூக்கு தண்டனை அமலாக்கம் குறித்து அறிவிப்பை நேற்று பெற்றதாக முன்னாள் வழக்கறிஞரும் சமூக நடவடிக்கையாளருமான எம். ரவி தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின் 2015ஆம் ஆண்டு தட்சினாமூர்த்திக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
எனினும் தனக்கு எதிரான தண்டனை தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிராக தட்சினாமூர்த்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்டதால் அதன் முடிவு தெரியும்வரை அந்த தண்டனையை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் நிறுத்தியிருந்தது.
சிங்கப்பூரில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் நான்கு மலேசிய பிரஜைகளில் தட்சினாமூர்த்தியும் ஒருவர் என இம்மாதம் தொடக்கத்தில் Suhakam அறிக்கை வெளியிட்டிருந்ததோடு இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.
பி. பன்னீர் செல்வம், S . சாமிநாதன் மற்றும் ஆர் லிங்கேஸ்வரன் ஆகிய இதர மூவர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு காத்திருக்கின்றனர்.