
கூலிம், ஜனவரி-28 – கெடா, கூலிம், சுங்கை ஊலார் தோட்டத் தமிழப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அண்மைய ஒன்று கூடும் நல்லெண்ண விருந்து, பெருமையும் கவலையும் கலந்து ஒலித்தது.
தற்போது கூலிம் நகரில் இரண்டாவது பெரிய தமிழ்ப் பள்ளியாக சுமார் 180 மாணவர்களுடன் இயங்கும் இந்தப் பள்ளி, நாடு முழுவதும் தமிழ்ப் பள்ளிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலான மாணவர் குறைவு பிரச்னையை பிரதிபலிக்கிறது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்திராக கலந்துகொண்ட பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனின் உரையிலும் இக்கவலை எதிரொலித்தது.
நாடளாவிய நிலையில் தமிழ்ப் பள்ளிகளில் 2023-ஆம் ஆண்டில் 11,712-டாக முதலாமாண்டு மாணவர்களின் சேர்க்க இருந்தது.
ஆனால், இவ்வாண்டு 10,280 பேராக அது குறைந்துள்ளது.
இந்த 3 ஆண்டுகளில் 1,400க்கும் மேற்பட்ட இளம் தமிழ்ப் மாணவர்களை நாம் இழந்துள்ளோம்.
தமிழ்ப் பள்ளிகளின் எதிர்கால குறித்து இது உள்ளபடியே மிகப் பெரிய கவலையை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டை கட்டமைப்பு நிதியாக அறிவித்துள்ளார்; அதற்கு நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால், “கட்டடங்களுக்கு நிதி இருந்தால் மட்டும் போதாது; வகுப்பறைகளை நிரப்புவது நம் சமூகத்தின் பொறுப்பு” என்று சண்முகம் வலியுறுத்தினார்.
1960-களிலிருந்து முன்னாள் மாணவர்களை ஒன்று சேர்த்த இந்தக் கூட்டம், நினைவுகளை மட்டுமல்ல, செயல்பாட்டுக் குழுவாக மாறி, முன்னாள் மாணவர் சங்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைந்தது.
“நம்மைக் காப்பாற்றியப் பள்ளிகளை, இப்போது நாம் காப்பாற்றுவோம்” என முன்னாள் மாணவர்களின் உறுதிகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களின் பொறுப்புணர்வையும் எடுத்தியம்பியது



