
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15 – கிள்ளானில் ஐந்தாம் படிவ மாணவி ஜி. ஷர்வினாவின் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை போலீஸ் மீண்டும் திறந்துள்ளது.
ஷர்வினா குடும்பம் சார்பில் தன்னார்வலரான அருண் துரைசாமி அதனை வணக்கம் மலேசியாவிடம் உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன் ‘மேல் நடவடிக்கை இல்லை’ என அது வகைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், ஷர்வினாவின் மரணத்தில் பள்ளியின் அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம், தகவல்களை மறைத்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பில், அவரின் குடும்பம் ஆதாரங்களுடன் மலேசிய விசாரணை ஆணையமான MACC-யிடம் புகார் கொடுத்துள்ளது.
அது குறித்து கருத்துரைத்த அருண், மாணவியின் மரணத்திற்கான உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்; அவர் பகடிவதைக்கு ஆளானதாகவும் புகார்கள் உள்ளன, ஆனால் அது போலீஸின் கைகளுக்குச் செல்லவில்லை என சொன்னார்.
இந்நிலையில், இப்புதிய விசாரணையில் ஷர்வினாவின் மரணத்தில் இருக்கும் மர்மமுடிச்சுகள் அவிழும் என எதிர்பார்ப்பதாக, அவரின் தாயார் மகேஸ்வரி பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
17 வயது ஷர்வினா, கடந்த மே 27-ஆம் தேதி கிள்ளானில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் வாயில் நுரைத்தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
விஷம் குடித்தே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார் முன்னதாக ஏமாற்றம் தெரிவித்தனர்.