
கோலாலம்பூர், மே-2, கோலாலாம்பூரில் நில விற்பனை தொடர்பில் மாநகர மன்றமான DBKL உண்மைகளை மூடி மறைக்கக் கூடாது என, மூத்த செய்தியாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், நேரடி பேச்சுவார்த்தை டெண்டர் முறை முடிவுக்கு வர வேண்டும்; DBKL-லும் பிற அரசு நிறுவனங்களும் ஏலம் அல்லது திறந்த டெண்டர் மூலமாகவே அரசு சொத்துக்களை விற்க வேண்டுமென, ஆர். நடேஸ்வரன் கூறினார்.
ஜாலான் செராஸ் தமிழ்ப் பள்ளியின் விவகாரம் குறித்து மலேசியா கினியில் எழுதிய கட்டுரையில் அவர் அதனை வலியுறுத்தினார்.
விளையாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அருகிலுள்ள ஒரு காலி நிலத்திற்கு, 2005-ஆம் ஆண்டு முதலே அப்பள்ளி விண்ணப்பித்து வருகிறது.
சன்வே வேலாசிட்டிக்கு எதிரே 0.36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட காலியான நிலம், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளைக் கட்டவும், விளையாட்டு மைதானத்தை அமைக்கவும் போதுமானதாக இருந்தது.
இருந்த போதும், அந்நிலம், கார் பட்டறை, தடுப்பூசி மையத்துடன் கூடிய கிளினிக் ஆகியவற்றின் கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறி, செராஸ் தமிழ்ப் பள்ளியின் முயற்சிக்கு ‘முடிவுக் கட்டப்பட்டது’.
அந்நிலம், மேம்பாட்டாளருக்கு விற்கப்பட்டு விட்டதால், பள்ளியின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், உண்மையிலேயே அந்நிலம் விற்கப்பட்டதா என்றால், இல்லையென்றே பதில் வரும்; இதில் எதையோ DBKL மறைத்திருப்பதாக நடேஸ்வரன் சந்தேகம் எழுப்புகிறார்.
சந்தேகத்தைத் தீர்க்க, கடந்த வாரம் நில அலுவலகத்தில் பரிசோதித்த போது, DBKL-லே இன்னமும் நிலத்தின் உரிமையாளராக இருப்பது தெரிய வந்தது.
அப்படியானால், ஒரே நேரத்தில் நில உரிமையாளராகவும், அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்ற தரப்பாகவும் இருப்பது, நலன் முரண்பாடு அல்லவா? என நடேசன் கேள்வி எழுப்பினார்.
2015-ல், Brunsfield Group குழுமத்தின் துணை நிறுவனமான Warisan Tradisi Sdn Bhd அந்நிலத்தில் 26 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை அறிவித்தது.
ஆனால், அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை; நிலம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கட்டுமானம் தொடங்கும் வரை நிலத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்த அனுமதித் தருமாறு செராஸ் தமிழ்ப் பள்ளி DBKL-க்கு மீண்டும் கடிதம் எழுதியது; அப்போதும் எதுவும் நடக்கவில்லை.
இப்போது 7 ஆண்டுகள் அமைதிக்குப் பிறகு, அப்பளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்குப் ‘அதிர்ச்சிகரமான’ புது தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதாவது, திருத்தப்பட்ட திட்டத்தின் படி, அங்கு 42 மாடிகள் கொண்ட கட்டடம் எழுப்பப்படுகிறதாம்; நில மேம்பாட்டு உரிமையும் ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட Shayher குழுமத்தின் கைகளுக்கு மாறியுள்ளது.
அதே 3,623.2 சதுர மீட்டர் நிலப்பரப்பில், முதலில் 15 மாடிகள் கட்டப்படுமென அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 26 மாடிகளாக மாறி, தற்போது 42 மாடிகளில் வந்து நிற்கிறது.
ஆக, பட்டறை மற்றும் கிளினிக்குகளை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை DBKL விதிமுறைகளை மீறி வர்த்தக நோக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
எனவே கடந்த காலத்தில் நடைமுறையில் இருந்த “இரகசிய விற்பனையை” மீண்டும் செய்ய வேண்டாம்; வெளிப்படைத்தன்மை முக்கியமென நடேஸ்வரன் வலியுறுத்தினார்