
சண்டாக்கான், ஆகஸ்ட்-26 – மாற்றான் பேரப்பிள்ளை ஒரு குழந்தைக்குத் தாயாகும் அளவுக்கு அவரைக் கற்பழித்த குற்றத்திற்காக, சபா சண்டாக்கானில் 52 வயது ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டவரான அந்நபர் தம் மீதான 2 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
சண்டாக்கானில் உள்ள ஒரு கிராமத்தில் வயது குறைந்த பெண்ணை 2 முறை கற்பழித்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் இளைய உடன்பிறப்புகள் இருவரும், தங்களின் பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு பாட்டியுடனும் குற்றம் சாட்டப்பட்ட நபருடனும் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கற்பழிக்கப்பட்டதன் விளைவாக தனது மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருப்பதாக தாய் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, ஜூலை 23-ஆம் தேதி அந்நபர் கைதானார்.
இந்நிலையில் குற்றவியல் சட்டத்தின் கீழ், 2 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் சிறையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அதே சமயம், சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2 குற்றச்சாட்டுகளுக்கும் கூடுதலாக தலா 3 ஆண்டுகள் சிறையும் 2 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கைதான நாளிலிருந்து தண்டனை தொடங்கும் என்றும், சிறைவாசம் முடிந்ததும் சொந்த நாட்டுக்கே அவர் நாடு கடத்தப்படுவார் என்றும் நீதிபதி அறிவித்தார்.