கோலாலம்பூர், டிசம்பர்-2, இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் PPSMI எனப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிக்கு, பதிவுப் பெற்ற அமைப்புகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இந்தியச் சமூகத்திற்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஜனவரி 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை அதற்கு விண்ணப்பிக்கலாமென, இன்று வெளியிட்ட அறிக்கையில் மித்ரா கூறியது.
ஓர் அமைப்பு ஒரு விண்ணப்பத்தை மட்டுமே அனுப்ப முடியும்; அதுவும் https://spgkm.mitra.gov.my/ என்ற மித்ரா நிதி விண்ணப்ப முறை வாயிலாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கல்வி மற்றும் உயர் கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில் பயிற்சி, சமூக நலன், அடையாளம் மற்றும் அரவணைத்தல் ஆகிய 4 அம்சங்களில் ஒன்றின் மூலம் இந்தியச் சமூகத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கே நிதி வழங்கப்படும்.
மித்ரா நிதி விண்ணப்பத்துக்கான வழிகாட்டிகள் இன்று முதல் www.mitra.gov.my என்ற மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
மலேசிய இந்தியர்கள் குறிப்பாக வசதி குறைந்த B40 மற்றும் நடுத்தர வர்கத்தினரான M40 குடும்பங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த PPSMI நிதியை மித்ரா வழங்குகிறது.
எனவே, ஆர்வமுள்ள அமைப்புகள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.