கோலாலம்பூர், நவம்பர்-26 – TNB-யின் மின்சாரக் கட்டணத்தைத் தாமதமாகச் செலுத்திய வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள், கடந்தாண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை 35 விழுக்காடு அதிகரித்துள்ளன.
2023-ல் மொத்தம் 945 மில்லியன் ரிங்கிட் கட்டண பாக்கியை வைத்த 464,076 வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் துணையமைச்சர் அக்மால் நாசிர் கூறினார்.
அதே இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் 1 பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக கட்டண பாக்கியை வைத்துள்ள 627,491 வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாக, அவர் மக்களவையில் தெரிவித்தார்.
கடந்தாண்டு மின் கட்டண பாக்கியை அதிகம் வைத்திருந்த முதல் 5 மாநிலங்களாக சிலாங்கூர், திரங்கானு, பேராக், பஹாங், நெகிரி செம்பிலான் ஆகியவை விளங்குகின்றன.
இவ்வாண்டு, சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக், ஜோகூர், திரங்கானு ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
மக்கள் குறிப்பாக B40 தரப்பினர் தாமதமாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு, நிதிச் சுமை உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வீட்டு உரிமையாளர்களின் பெயர்களில் அல்லாமல் கணக்குகளைப் பதிவுச் செய்யும் பொறுப்பற்றச் செயல், மாதாந்திர வீட்டுச் செலவுகளில் TNB கட்டணத்தை எப்போதும் கடைசி இடத்தில் வைப்பது ஆகியவை இதர காரணங்களாகும் என்றார் அவர்.
எடுத்த எடுப்பிலேயே மின் விநியோகத்தை TNB துண்டிப்பதில்லை; அது மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை உணர்ந்திருப்பதால், கடைசி நடவடிக்கையாகவே அவ்வாறு செய்யப்படுகிறது.
எனவே, மாதாந்திர மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிக்கலை எதிர்நோக்குவோர், தவணை முறையில் சிறுகச் சிறுக செலுத்தும் சாத்தியங்கள் குறித்து TNB-யுடன் கலந்துபேசி பார்க்கலாம் என துணையமைச்சர் சொன்னார்.