
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – வியாழக்கிழமை ஏற்பட்ட மின் தடையைத் தொடர்ந்து, KLIA 2-வில் உள்ள மின் உள்கட்டமைப்பை முழுமையாக மதிப்பாய்வுச் செய்யுமாறு, MAHB எனப்படும் மலேசிய விமான நிலைய நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
“என்ன நடந்தாலும், செயல்பாடுகள் பாதிக்கப்படாது, மின்சாரம் எப்போதும் உறுதிச் செய்யப்படும்” என்ற உத்தரவாதத்தை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் MAHB-யிடம் கூறியுள்ளார்.
நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த கூட்டத்தின் போது MAHB தனது அறிக்கையைச் சமர்ப்பித்ததாகவும், அதிக வெப்பம் காரணமாக மின் கம்பி இணைப்பு மற்றும் கேபிள்கள் தீப்பிடித்ததால் மின் தடை ஏற்பட்டதாக அதில் விளக்கியதாகவும் அமைச்சர் சொன்னார்.
இந்நிலையில் எந்தவொரு சூழ்நிலையிலும் மாற்று ஜெனரேட்டர் முறை உடனடியாக செயல்படுத்தப்படுவது முக்கியம் என அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.
முன்னதாக மின்சாரத்தை மீட்டெடுக்க MAHB 28 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது மிக நீண்ட நேரம் என ஏமாற்றம் தெரிவித்த அந்தோணி லோக், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியிருந்தார்.
பொதுப் போக்குவரத்துத் துறையில் 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் எந்தவொரு இடையூறும் ஒரு பெரிய சம்பவமாகக் கருதப்படும்; இதனால் நாட்டின் நற்பெயருக்கு தான் களங்கம் என அவர் நினைவுறுத்தினார்.