
பாக்கோக், மார்ச்-28- மியன்மாரை மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் பேங்கோக்கில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பேங்கோக்கிலும் கட்டிடங்கள் சேதமடைந்தன.
குறிப்பாக நகரின் வடக்கில் கட்டுமானத்திலிருந்த 30 மாடி உயரக் கட்டடம் சரிந்து விழுந்தது.
அதன் போது கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து பேங்கோக்கில் அவசரகால நிலையை அறிவிப்பதாக பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத் சற்று முன்னர் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், உயிர் சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
மத்திய மியன்மாரை இன்று நண்பகல் வாக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டதில் அதிர்வுகள் மலேசியாவின் மேற்குக் கரை மாநிலங்களிலும் உணரப்பட்டன.
பினாங்கு, பட்டவொர்த்திலும் நில அதிர்வு ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
எனினும் மியன்மார் நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அபாயம் எதுவுமில்லை என வானிலை ஆராய்சித் துறையான MET Malaysia கூறியது.