வாஷிங்டன், டிசம்பர்-14, அமெரிக்கா விதிக்கவுள்ள தடையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் டிக் டோக் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
சீனாவைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்திலிருந்து ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பிரிந்து விட வேண்டுமென டிக் டோக்கிற்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது தெரிந்ததே.
இந்நிலையில் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு வரும் வரை, அமெரிக்க அரசின் உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி டிக் டோக் மனு செய்திருந்தது.
ஆனால் நேற்று விசாரணைக்கு வந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், நேரத்துடன் போராட வேண்டிய சூழ்நிலைக்கு அந்த வீடியோ பகிர்வுத் தளம் தள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 19 நெருங்குவதால், அதற்குள் எப்படியாவது உச்ச நீதிமன்றத்தை அணுகி அமெரிக்க அரசின் ஆணைக்கு எதிராக டிக் டோக் தடை உத்தரவு வாங்கியே ஆக வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்க மண்ணை விட்டு அது சீக்கிரமே வெளியேற வேண்டி வரலாம்.
பயனர்களின் தரவுகளைச் சேகரிப்பதோடு வேவு பார்க்கவும் பெய்ஜிங்கை டிக் டோக் அனுமதிப்பதாக அமெரிக்கா நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 19-குள் டிக் டோக்கை விற்கா விட்டால், அமெரிக்க App Store மற்றும் இணையத்தில் டிக் டோக்கை ஒரேடியாக தடைச் செய்யும் உத்தரவில், அதிபர் ஜோ பைடனும் ஏப்ரலில் கையெழுத்திட்டார்.