
கோலாலாம்பூர், ஜனவரி-16 – “முகத்தைத் திருப்பிக் கொண்டது போதும்… மனக்கசப்புகளை மறந்து விட்டு மீண்டும் ஒன்றிணைந்துப் பணியாற்றுங்கள்” என, ம.சீ.ச மற்றும் ம.இ.காவுக்கு தேசிய முன்னணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அழைப்பு விடுத்துள்ளார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று காலை அம்னோ பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், சாஹிட் அவ்வாறு கூறினார்.
“சகோதர சகோதரிகள் இடையே சில நேரம் கருத்து மோதல்கள் வருவது இயல்புதான், ஆனால் இறுதியில் மீண்டும் ஒன்றிணைவதே முக்கியம்” என்றார் அவர்.
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி இணைந்திருந்தாலும், அதனால் BN கூட்டணி கட்சிகளிடையே சில பதற்றங்கள் உருவானதை சாஹிட் ஒப்புக்கொண்டார்.
என்றாலும், BN வலிமை அதன் ஒற்றுமையில்தான் இருப்பதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், ம.இ.காவையும் ம.சீ.சவுவையும் எப்போதும் போல தொடர்ந்து சமாதானப்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. பழசை ஒதுக்கி விட்டு இது முன்னேற வேண்டிய நேரம்” என நினைவுறுத்தினார்.
மனஸ்தாபங்கள் இருந்தாலும், அம்னோ மாநாட்டில் ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றதற்கும் சாஹிட் நன்றித் தெரிவித்தார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி இடம் பெற்றதிலிருந்து, கூட்டணியில் தாங்கள் அழையா விருந்தாளியாக நடத்தப்படுவதாக ம.சீ.சவும் ம.இ.காவும் அதிருப்தியில் உள்ளன.
இந்நிலையில் தைப்பூசத்திற்கு பிறகு ம.இ.கா அதன் எதிர்காலம் குறித்த முடிவை அறிவுக்குமென, சரவணன் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



