
கோலாலம்பூர், நவம்பர்-16 – தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவினை எடுக்கப் போகும் இன்றைய ம.இ.கா பொதுப் பேரவை சிறப்பாக நடைபெற, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ம.இ.கா பேராளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தலைமையிலான 79-ஆவது ம.இ.கா பொதுப்பேரவை, மக்களின் நலன், குறிப்பாக இந்திய சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நலத்தை உறுதிப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்துள்ளதாக அன்வார் குறிப்பிட்டார்.
மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, அரசாங்கம் அனைவரையும் அரவணைத்து, நீதி மிக்க மற்றும் முன்னேற்றமான கொள்கைகள் மூலம் நாட்டை கட்டியெழுப்ப உறுதியாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
ஒற்றுமை மனப்பான்மை, மாற்றத்திற்கான துணிச்சல் மற்றும் இணைந்து செயல்படும் அர்ப்பணிப்பின் மூலம் மட்டுமே, ஒவ்வொரு குடிமகனும் சமமான வளர்ச்சி பலன்களை அனுபவிக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.
இந்நிலையில், மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மலர் கூடையையும் அனுப்பி வைத்தார்.
பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனும் மாநாட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமரானதிலிருந்து வழக்கமாக ம.இ.கா பொதுப்பேரவைகளில் அன்வார் கலந்துகொள்ளாத நிலையில், இம்முறை வாழ்த்துத் தெரிவித்து மலர்கூடையும் அனுப்பியிருப்பது பேராளர்கள் மத்தியில் பேசும்பொருளாகியுள்ளது.



