
கோலாலம்பூர், டிச 1 – நிலையான மின்சார வாகன சூழலமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காப்புறுதி மற்றும் பேட்டரியைத் தவிர்த்து 80,000 ரிங்கிட் விலையில் Perodua தனது முதல் மின்சார வாகனமான (EV), QV-E-ஐ இன்று அறிமுகப்படுத்தியது.
தொலைநோக்குடைய மின்சார வாகனத்திற்கான தேடலை குறிக்கும் QV-E, 800 மில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு செலவை ஏற்படுத்தியதோடு இத்திட்டம் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் நிபுணர்களை உட்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2023 ஆம் ஆண்டு ,செப்டம்பர் 1, ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட புதிய தொழில்துறை பெருந்திட்டம் 2030 இன் கீழ், மின்சார வாகன சூழலமைப்பை உருவாக்க உள்ளூர் வாகன உற்பத்தியாளர்களிடையே Perodua தலைவராக நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்தத் தெளிவான வழிகாட்டுதலுக்கு Perodua ஒரு EV எனப்படும் மின்சார வாகன வெளியீட்டை நிறைவேற்ற வேண்டியிருந்தது, அந்த நேரத்தில் இலக்கு மிகவும் லட்சியமானது என்றும், போதுமான உள்ளூர் திறன்கள் மற்றும் நிபுணத்துவம் இன்னும் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம் என்றும் தான் நினைத்ததால் சற்று பதட்டமாக இருந்ததையும் உணர்ந்ததாக அன்வார் கூறினார்.
ஆனால் இன்று, இந்த Perodua EV வெளியீட்டைப் பற்றி மட்டுமல்ல, உள்ளூர் திறமையாளர்களின் நிபுணத்துவம், கட்டொழுங்கு , மற்றும் விடாமுயற்சி மூலம் இது தயாரிக்கப்பட்டது என்பதாலும் தான் மிகவும் பெருமைப்படுவதாக QV-E கார் வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார்.



