
கோலாலம்பூர், ஏப் 13 -விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் தனது மடியில் ஒரு பெண்ணை அமரவைத்துக் கொண்டு பேருந்தை ஓட்டும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த பேருந்து சேவையை நடத்தும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை உடனடியாக வேலையிலிருந்து நீக்கியது.
இந்தச் சம்பவம் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு முற்றிலும் ஏற்றுக்கொள்ள
முடியாத ஒன்றாக இருப்பதாக அந்த பேருந்து நிறுவனம் விவரித்துள்ளது.
அந்தக் காணொளியில் காணப்படும் நடத்தை, நிறுவனத்தின் நிர்ணயிக்கப்பட்ட
சீரான நடைமுறைகளை கடுமையாக மீறுவதாகவும், அதன் ஊழியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தொழில்முறை நடத்தை நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக ஸ்ரீ மாஜூ விரைவு பேருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரின் வேலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த விரைவு பேருந்து கோலாலம்பூரில் TBS முனையத்திலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள லார்கினுக்குச் சென்று கொண்டிருந்ததாக ஸ்ரீ மாஜு குழுமம் (Sri Maju Group ) உறுதிப்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ்துறை மற்றும் தரை பொதுப் போக்குவரத்து நிறுவனத்திடம் புகார்களைப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களது மனமார்ந்த மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்வதோடு , ஒவ்வொரு பொதுப் போக்குவரத்துப் பயனரும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் தொழில்முறை சேவையைப் பெறத் தகுதியானவர்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.



