
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-23- ஹஜ் யாத்திரீகர்களின் நிதியான Tabung Haji முஸ்லீம் அல்லாதோரால் நிர்வகிக்கப்படுவதாகப் பரவியுள்ள வைரல் குற்றச்சாட்டை, அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சேமிப்புகளை திரும்பப்பெறுமாறு முஸ்லீம்களைத் தூண்டி விடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில்
பரவியதையடுத்து இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகமும் ஹஜ் செயல்பாடுகளும் 100 சதவீதம் பூமிபுத்ரா – முஸ்லீம் தலைமையின் கீழ் தான் உள்ளதாக, Tabung Haji நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Mustakim Mohamad கூறினார்.
எனவே Tabung Haji முஸ்லீம் அல்லாதோரின் கட்டுப்பாட்டிலிருப்பதாகக் கூறப்படும் பொய்ச் செய்திகளை நம்பவோ பகிரவோ வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
Rebranding எனப்படும் மறுதோற்ற முயற்சிகளால் எழுப்பப்பட்ட சில கவலைகளால், Tabung Haji-யிருந்து பணத்தை மீட்க முஸ்லீம்களைத் தூண்டி விடும் வீடியோக்கள் குறித்து அதிகாரத் தரப்பிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாக, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ நாயிம் முக்தார், முன்னதாகக் கூறியிருந்தார்
குறிப்பாக கிராம மக்கள் மத்தியில் வாட்சப் வாயிலாக தவறான தகவல்கள் பரவுவதாகக் கூறப்பட்டது.
அந்த மறுதோற்றப் பணிகள் முஸ்லீமல்லாத நிறுவனம் மூலம் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
ஆனால், நாயிமோ, அது பிற நிறுவன நியமனங்கள் போலவே நடைபெற்றது எனத் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், அதிகரிக்கும் ஹாஜ் செலவுகளைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர் மையக் கோட்பாட்டுடன் இயங்கும் சேமிப்பு நிறுவனமாக TH மாற வேண்டும் என்பதற்காகவும் இந்த rebranding அவசியம் என Mustakim கூறினார்.