கோலாலம்பூர், பிப்ரவரி-6 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், இறுதிச் சடங்குகள் அல்லது வேறு எந்த நிகழ்வுகளுக்கும் தலைவர்களையோ அல்லது முஸ்லிம்களையோ அழைக்கும்போது, இஸ்லாமிய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை, அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான MAHIMA-வின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் அதனை வலியுறுத்தியுள்ளார்.
அது முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல் என்றாலும், முஸ்லீம் அல்லாதோரையும் நேரடியாக சம்பந்தப்படுத்துகிறது.
இது அமுலுக்கு வந்தால் பல்லின மக்கள் மத்தியில் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
பல்லின மலேசிய மக்கள் தங்களுக்கிடையிலான வேற்றுமை மற்றும் வரையறைகளை ஏற்கனவே அறிவர்.
அதனால் தான் சகிப்புத் தன்மையுடனும் புரிந்துணர்வுடனும் காலங்காலமாக ஒற்றுமையாக நம்மால் வாழ முடிகிறது.
இவ்வளவு ஏன், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமே, 2019-ஆம் ஆண்டு ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத் தைப்பூசத்தில் பங்கேற்றதை இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம்.
மாநிலத்தின் சுல்தானே இன்னொரு சமய விழாவுக்கு வருகைத் தந்து, மக்கள் குறிப்பாக இந்துக்களின் மனங்களைக் குளிரச் செய்தார்.
ஆக, பல்லின மத கலாச்சாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இப்போது திடீரென அதில் புதிய விதிமுறைகளைப் புகுத்த வேண்டிய அவசியமில்லை.
எனவே, இவ்விஷயத்தில் அரசாங்கம் நல்லததோர் இணக்கமான முடிவை எடுக்குமென எதிர்பார்ப்பதாக டத்தோ சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பிப்ரவரி 25 முதல் 27 வரை நடைபெறும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய முசாகாரா மாநாட்டில் சர்ச்சைக்குரிய அந்த உத்தேச விதிமுறைகள் இறுதிச் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.