
முஹிடினின் சாணக்கியம் பெர்சாத்து அரசியல் புயலைக் கடக்கும் – சஞ்சீவன் நம்பிக்கை
கோலாலாம்பூர், பிப்ரவரி-9,
உட்பூசலை எதிர்நோக்கியுள்ள பெர்சாத்து கட்சியை, அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தனது சாணக்கியத்தால் கரையேற்றுவார்!
பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அவ்வறு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உள் நெருக்கடிகள் என்பது அரசியல் கட்சிகளின் வளர்ச்சி பயணத்தின் ஓர் அங்கமாகும்.
எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் எந்தவோர் அரசியல் கட்சியும் அதனைத் தவிர்க்க முடியாது.
1987-ல் உட்பூசலால் அம்னோவே பிளவுப்பட்டது; பாஸ் கட்சி கூட தலைமைத்துவ நெருக்கடியைச் சந்தித்துள்ளது
தற்போது பெர்சாத்து அதே நிலையை எதிர்கொள்கிறது…அவ்வளவுதான் என, அதன் உச்சமன்ற உறுப்பினருமான சஞ்சீவன் சொன்னார்.
என்றாலும், பிரச்னைகளைச் சமாளித்து பெர்சாத்து வலிமையாகவும் முதிர்ச்சியுடனும் முன்னேற, முன்னாள் பிரதமருமான முஹிடினின் அரசியல் அனுபவமும் அறிவும் கைக்கொடுக்கும்.
நெருக்கடி முடிவு அல்ல, உண்மையான தலைமைத்துவத்தை உருவாக்கும் களம் எனக் குறிப்பிட்ட சஞ்சீவன், _“அமைதியான கடல், சிறந்த மாலுமியை உருவாக்காது”_ என தனதறிக்கையில் தெரிவித்தார்.
முஹிடின், மற்றும் பெர்சாத்து துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் இருவருக்கும் இடையில் உறவு கசந்து, அந்த நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் கட்சியிலிருந்தே நீக்கப்படலாம் என்ற அளவுக்கு நிலைமை மோசமாகி வரும் நிலையில் சஞ்சீவன் இவ்வாறு கூறினார்.



