
முஹிடின் பதவி விலக வேண்டுமா? ரோனல்ட் கியாண்டியின் அறிக்கை தன்னலம் நிறைந்தது; சஞ்சீவன் குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், பிப்ரவரி -10,
பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசி விலக வேண்டுமென, அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr ரோனல்ட் கியாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளது, அவரின் சுயநலத்தை புலப்படுத்துகிறது.
முஹிடின் தலைமைத்துவத்தின் மீது புழுதிவாரி தூற்றியுள்ள கியாண்டியின் அறிக்கை, அவரின் தனிப்பட்ட நலன்களால் நிரம்பியது என, பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் காட்டமாகக் கூறியுள்ளார்.
_“சபாவில் ஏற்பட்ட தனது சொந்த தோல்விகளை கியாண்டி மறைக்க முயல்கிறார்; குறிப்பாக சபா பெர்சாத்துவில் வலிமையை உருவாக்கத் தவறியது, தலைமை மற்றும் அடிப்படை உறுப்பினர்களை ஒன்றிணைக்க முடியாதது, மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறியது”_ என சஞ்சீவன் சுட்டிக் காட்டினார்.
சபா தேர்தலிலும் அவரால் வெற்றியை வழங்க முடியவில்லை…
எனவே, பதவி விலக வேண்டும் என்றால் அது ரோனல்ட் கியாண்டி தானே ஒழிய முஹிடின் அல்ல என, பெர்சாத்துவில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் தெரிவித்தார்.
முஹிடின், கட்சியை பூஜ்யத்திலிருந்து கட்டியெழுப்பி, மத்திய அரசாங்கத்தை வழிநடத்தி, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்தவர் ஆவார்; அவரின் பங்களிப்புகளுக்கு முன், சபாவில் சாதிக்க முடியாத கியாண்டி எல்லாம் எம்மாத்திரம் என சஞ்சீவன் கேட்டார்.
உட்கட்சி பூசலை உரிய முறையில் தீர்க்கத் தவறியதால் முஹிடின் பதவி விலக வேண்டுமென, உதவித் தலைவர் என்ற மூன்றாவது உயர் பதவியில் இருக்கும் கியாண்டி வெளியிட்ட அறிக்கை பெர்சாத்துவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



