
பூரி, ஜூலை-31- பூரி ஜெகநாதர் கோயில் கிழக்கிந்திய மாநிலமான ஒடிஷாவின் (Odisha) பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலாகும். அங்கு ஸ்ரீ கிருஷ்ணரை பக்தர்கள் ஜெகநாதராக வழிபடுகின்றனர்.
இந்தியாவின் மதிப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜெகநாதர் கோயிலுக்குள் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது; கோயிலுக்குள் கைப்பேசிகள் அனுமதிக்கப்படாது என ஒரு பெரிய பலகையே வைக்கப்பட்டுள்ளது.
விதிகளைப் பின்பற்றத் தவறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது மூக்குக் கண்ணாடியில் பதிக்கப்பட்ட கேமராவைப் பயன்படுத்தி கோவிலுக்குள் நடப்பவற்றை வீடியோவில் பதிவுச் செய்ய முயன்ற ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கோயில் நுழைவாயிலில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய அவ்வாடவரை, பாதுகாவலர்கள் பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது, தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு நேரடியாக காட்சிகளை அனுப்பும் வசதியைக் கொண்ட Ray-Ban Meta Wayfarer எனும் வேவுப் பாக்கும் கண்ணாடியை அவர் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசிய ரிங்கிட்டுக்கு 1,620 வெள்ளியிலான இத்தகையக் கண்ணாடிகள் உலகம் முழுவதும் வணிக முறையில் கிடைப்பதாகும்.
இதையடுத்து மூக்குக் கண்ணாடி பறிமுதல் செய்யப்பட்டு, அவ்வாடவர் விசாரணைக்காகக் கொண்டுச் செல்லப்பட்டார்.