
புத்ராஜெயா, ஆகஸ்ட் 13 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), நாட்டின் தெற்கில் செயல்பட்ட, மூத்த மலேசிய இராணுவ அதிகாரிகள் (ATM) தலைமையிலான கடத்தல் கும்பலை Ops Sohor எனப்படும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக முறியடித்தது.
இன்று அதிகாலை தொடங்கிய சோதனையில், ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகளும், 30 முதல் 55 வயதுக்குட்பட்ட ஐந்து பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் பொறுப்பில் இருக்கும் இராணுவ அதிகாரிகளே, கடந்த ஐந்து ஆண்டுகளாக கடத்தல் கும்பலுடன் இணைந்து, 3 மில்லியன் ரிங்கிட்டிக்கும் மேற்பட்ட லஞ்சம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
இந்த ஐந்து அதிகாரிகளும், கடத்தல்காரர்களுக்கு இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை கசியவிட்டதுடன், போதைப்பொருள், சிகரெட் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பிற பொருட்களை மலேசியாவிற்கு கடத்தும் வலையமைப்பில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு கடத்தல் பயணத்திற்கும் 30,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
கடந்த 12 மாதங்களாக நடைபெற்ற உளவுத்துறை கண்காணிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட Op Sohor நடவடிக்கையில் 63,000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட ரொக்கம், பல போதைப்பொருள் பொட்டலங்கள், எடை மற்றும் அளவிடும் கருவிகள், மதுபானம் மற்றும் போலி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று MACC இன் துணைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அகமது குசைரி பின் யஹாயா தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் கடத்தல் சம்பவம் என்பதால், இதை அனைத்து தரப்பினரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அனைத்து சந்தேக நபர்களும் நாளை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.