
ஷா அலாம், நவ 16- 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணியில் உறுப்பினராக இருந்து நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கும் அளப்பரிய பங்காற்றிய ம.இ.காவின்
அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு முக்கியமான முடிவு எடுக்கும் தருணத்தில் கட்சியின்
79ஆவது தேசிய பொதுப் பேரவை பேராளர்கள் இருப்பதாக அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.
மலேசிய அரசியலில் ம.இ.காவுக்கு நீண்ட வலாறு இருக்கிறது. கடந்த காலங்களில் தேசிய முன்னணி எடுக்கும் எந்தவொரு முடிவும் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கும் பாரம்பரியத்தை தேசிய முன்னணி தலைமைத்துவம் கொண்டிருந்தது.
ஆனால் இப்போது தேசிய முன்னணிக்கு பல ஆண்டுகளாக விசுவாசமாகவும் மூன்றாவது மிகப் பெரிய உறுப்புக் கட்சியாகவும் இருக்கும் ம.இ.கா தலைமைத்துவத்திடம் கலந்து ஆலோசனை நடத்தாமலேயே அம்னோ முடிவு எடுத்து வருவதை விக்னேஸவரன் பேராளர்களிடையே தனது கொள்கை உரையில் சுட்டிக்காட்டினார்.
ம.இ.காவின் சுயகௌரவத்திற்கு சிறிது கூட மதிப்பு கொடுக்காமல் சொந்தமாக முடிவை எடுத்து அதனை ம.இ.காவில் திணிக்கும் அம்னோ தலைமைத்துவத்தின் போக்கை நாம் இனியும் சகித்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே பேராளர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். அப்படி இன்று எடுக்க முடியாவிட்டால் ம.இ.கா மத்திய செயலவை முடிவெடுப்பதற்கான அங்கீகாரத்தைப் பேராளர்கள் அனைவரும் வழங்க வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.



