
கோலாலம்பூர், ஜூலை-25- மலேசியா இன்று தென்கிழக்காசியாவிலேயே அதிகமான நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் உள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதற்குப் பெரும்பாலான காரணங்கள் தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் சரியான மருத்துவ பரிசோதனை செய்யாததே என, ம.இ.காவின் தேசிய சுகாதார பிரிவு தலைவர் Dr. T. நோவலன் தெரிவித்தார்.
முறையான மருத்துவப் பரிசோதனைகளும் ஆரோக்கிய விழிப்புணர்வும் , ஒருவரின் உடல்நலத்தை பேணுவதற்கும், நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கும், நோயின் தீவிரத்தை குறைக்கவும், திடீர் மரணங்களை தவிர்க்கவும் மற்றும் சிகிச்சையை எளிதாக்கவும் மிகவும் உதவுகிறது.
இந்த அவசியத்தை உணர்ந்து, ம.இ.காவின் தேசிய சுகாதார பிரிவு, அந்தந்த மாநில ம.இ.காவுடன் இணைந்து, நாடு முழுவதும் இலவச சுகாதார பரிசோதனை முகாம்களை தொடங்கியுள்ளதாக நோவலன் சொன்னார்.
முதல் கட்டமாக இந்த இலவச சுகாதார பரிசோதனை முகாம், நாளை ஜூலை 26-ஆம் தேதி, சனிக்கிழமை, பெர்லிஸ் மாநிலத் தலைநகர் கங்காரில் நடைபெறுகிறது.
கூன் ஐக் பள்ளி மண்டபத்தில் ( Dewan Sekolah Koon Aik ) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இது நடைபெறும். இத்திட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும்.
இந்த இலவச மருத்துவ முகாமில் பொதுச் சுகாதார அறிவுரை, மருத்துவ ஆலோசனை மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படும்.
அதோடு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவீடு, இருதய பரிசோதனைகள், நுரையீரல் பரிசோதனைகள், பல் பரிசோதனை, மூட்டு தேய்மான பரிசோதனை, கண் பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்படும்.
மிக முக்கியமாக, இரத்த தான முகாமும் நடைபெறுகிறது. எனவே அனைவரும் இம்முகாம்களில் பங்கேற்று, ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்வதோடு, குடும்பத்தையும் சமுதாயத்தையும் பாதுகாக்கவும் உதவி செய்யுமாறு, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான நோவலன் கேட்டுக் கொண்டார்.