
தாப்பா, செப்டம்பர்-19 – தேசிய முன்னணியிலிருந்து விலகி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ம.இ.கா இணையுமா இல்லையா என்பது, வரும் நவம்பரில் தெரிய வரும்.
ம.இ.கா பொதுப் பேரவையில் அந்த இறுதி முடிவு எடுக்கப்படுமென, கட்சித் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தானில் வந்திணையுமாறு பாஸ் கட்சியும் பெர்சாத்துவும் ம.இ.காவுக்கு அழைப்பு விடுத்துள்ளன; அழைப்புக்கு நன்றி…
காரணம், ம.இ.காவின் சேவை இன்னமும் தேவை என்பதற்கான அடையாளமாக அந்த அழைப்பு விளங்குகிறது.
ஆனால், கட்சியின் எதிர்காலம் குறித்த அந்த முக்கியமான முடிவை, தாமோ அல்லது தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனோ தன்னிச்சையாக எடுக்க முடியாது; அந்த அதிகாரம் தங்களுக்கு இல்லையென, சரவணன் தெளிவுப்படுத்தினார்.
பொதுப் பேரவையில் தீர்மானம் தாக்கல் செய்து அதன் மீது ம.இ.கா பேராளர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
சில மாநில ம.இ.கா தொடர்புக் குழுக்கள் தேசிய முன்னணியிலிருந்து வெளியேற தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், பொதுப் பேரவையின் முடிவே உச்சமானது என்றார் அவர்.
தேசிய முன்னணியுடனான உறவு முன்புபோல் நெருக்கமாக இல்லையென்றாலும், கூட்டணிக் கட்சி என்ற முறையில் தற்போதைக்கு உறவுத் தொடருவதாகவும், சரவணனன் சொன்னார்.