
வாஷிங்டன், ஏப்ரல்-19- யுக்ரேய்ன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் விரைவில் முன்னேற்றம் காணப்படவில்லையென்றால், அதிலிருந்து அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ளும்.
மோஸ்கோவும் – கியெஃபும் தொடர்ந்து பிடிவாதம் காட்டினால், விலகிக் கொள்வதைத் தவிர வாஷிங்டனுக்கு வேறு வழியில்லையென, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்தார்.
“கண் மூடி கண் திறப்பதற்குள் போர் நிறுத்தம் நிகழ வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை; ஆனால் கூடிய சீக்கிரம் அது நடந்தாக வேண்டுமென, வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.
இரு நாடுகளின் பிடிவாதத்தால் அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள்; இது நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால் அம்முயற்சியை நீங்கள் கடினமாக்கினால், அமெரிக்காவுக்கு அதில் இனியும் வேலையிருக்காது என டிரம்ப் கடிந்துகொண்டார்.
2022-ஆம் ஆண்டு யுக்ரேய்ன் மீது போர் தொடுத்த ரஷ்யா, போர் நிறுத்தத்திற்கு சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
யுக்ரேய்னும் அதன் பங்குக்கு ‘இழுத்துப் பிடிப்பதால்’ அமைதி முயற்சி தாமதமாகி வருகிறது.
ஜனவரியில் இரண்டாம் தவணையாக அதிபரான வேகத்தில் இந்த ரஷ்ய-யுக்ரேய்ன் போருக்கு முடிவுக் கட்ட டிரம்ப் எண்ணியிருந்தார்.
ஆனால் இரு நாடுகளும் இறங்கி வர மறுப்பதால் உள்ளபடியே அவர் விரக்தியடைந்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற யுக்ரேய்ன் அதிபர் வொளோடிமர் செலன்ஸ்கி, தன்னிடமே பிடிவாதமாகப் பேசியதால் டிரம்ப் அவரைத் திட்டி வெள்ளை மாளிகையிலிருந்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.