
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16 – முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் 12 வயது மகன் மீது மர்ம நபர்கள் நடத்தியத் தாக்குதல் கோழைத்தனமானது என, பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுவும் ஒரு பாவமும் அறியாத சிறுவனை, ஊசியால் குத்துவது என்பது மனிதாபிமானமற்றச் செயலாகும்.
மிரட்டல் விடுக்கும் இதுபோன்ற கொடூரத்தை சற்றும் ஏற்க முடியாது.
எனவே இச்சம்பவத்தை போலீஸார் விரைந்து, விரிவாக, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலில், பொதுச்சேவைத் துறையில் அல்லது சமூக ஆர்வலர்களாக இருப்பதால், எந்நேரமும் பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்து கவலைப்படும் சூழ்நிலை இந்நாட்டில் எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது.
ரஃபிசி மகன் மீதான தாக்குதல், நாட்டில் கடும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
முக்கியப் புள்ளிகள் கடத்தப்படுவது, குண்டர் கும்பல் தாக்குதல்கள், ஆயுதமேந்திக் கொள்ளை, கூலிக்கு ஆள் வைத்து கொல்வது என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
எனவே, திட்டமிட்ட குற்றச்செயல்கள் மீதான உளவு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்தல், பொது பாதுகாப்புக் கொள்கைகளை மேலும் கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
மக்கள் சதா பயத்திலேயே வாழ முடியாது..
காலம் தாழ்த்தினால் பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் குறைத்து விடுமென அறிக்கை வாயிலாக சஞ்சீவன் நினைவூட்டினார்.