
ஸ்டோக்ஹோம், செப்டம்பர்-8 – வெயில் காலங்கள் மட்டுமின்றி வழக்கமான நாட்களிலேயே தொண்டைக்கு இதமாக நாவுக்கு ருசியாகவும் மலேசியர்கள் மத்தியில் பிரபலமானது தான் ‘ஐஸ் கச்சாங்’ இனிப்பு பதார்த்தம்.
மலேசியா வரும் சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய சுற்றுப் பயணிகள் மட்டுமல்லாமல் ஸ்வீடன் போன்ற மேலை நாடுகளிலும் இது தற்போது புகழடைந்துள்ளது.
சுற்றுப் பயணமாக ஒருமுறை மலேசியா வந்த ஒரு ஸ்வீடன் இளைஞர், ‘ஐஸ் கச்சாங்’ ருசியால் ஈர்க்கப்பட்டு அதன் மீது ‘காதல்’ கொண்டார்.
அதோடு நிற்பார் என்று பார்த்தால், மனிதர் தாய்நாட்டுக்குத் திரும்பி சிறிய தள்ளுவண்டியில் நடமாடும் ‘ஐஸ் கச்சாங்’ கடையையே திறந்து விட்டார்.
அதுவும் ஐஸ் கட்டிகளை அரைக்கப் பயன்படுத்தும் அதே பாரம்பரிய இயந்திரத்தைக் கொண்டு நம்மூர் ‘பசார் மாலாம்’ சுவையை சுவீடன் சாலைகளில் அவர் தருகிறார்; அங்குள்ளவர்களும் ஆர்வ மிகுதியில் வரிசையில் நின்று இந்த “மலேசிய பனி இனிப்பை”சுவைக்கிறார்கள்.
உணவு, மீண்டும் ஒருமுறை, கலாசாரங்களை இணைக்கும் இனியப் பாலமாகிறது என்பதற்கு இந்த ‘ஐஸ் கச்சாங்’ கதையும் ஒரு சான்றாகும்.