
ரவாங் உச்சிமலை முனீஸ்வரர் கோயில் இடிப்பு: ‘சமூக ஆர்வலர்’ உட்பட 4 பேர் கைது
ரவாங், பிப்ரவரி-12,
சிலாங்கூர், ரவாங் பெர்டானாவில், உச்சிமலை முனீஸ்வரர் கோயில் நேற்று காலை தனிநபர்களால் இடிக்கப்பட்டது.
இதையடுத்து 26 முதல் 39 வயதிலான 4 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டதை, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar உறுதிப்படுத்தினார்.
ஊராட்சி மன்றம் மற்றும் புகார்தாரருக்கு முன்கூட்டியே தெரிவிக்காமலும் கலந்தாலோசிக்காமலும் கோயிலை இடித்ததன் பேரில் அவர்கள் கைதாகினர்.
கூடவே, backhoe மண்வாரி இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்காக அவர்கள் இன்று முதல் தடுத்து வைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில் சமூக ஆர்வலராக தம்மைக் காட்டிக் கொண்டு அதனை முன்னின்று நடத்திய Tamim Dahri-யும் கைதுச் செய்யப்பட்டவர்களில் ஒருவர் என, மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
கோயில் உடைப்பு, “அனுமதி இல்லாத வழிபாட்டுத் தலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக, Tamim-மின் வழக்கறிஞர் Aidil Khalid கூறிக் கொண்டார்.
இந்த உச்சிமலை முனீஸ்வரர் கோயில் Yayasan Kubra அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 2018 முதல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகவும், asnaf எனப்படும் வசதி குறைந்தவர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு வழிவிடவே அது இடிக்கப்பட்டதாகவும் Aidil காரணம் கூறினார்.
ஆனால், இந்த நடவடிக்கை உள்ளூர் இந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது, எல்லை மீறியச் செயல் என்பதோடு, பொது அமைதியைக் கெடுக்கும் அபாயத்தைக் கொண்டது என, இந்துக் கோயில்கள் மீதான பணிக் குழுவான HTTF இச்சம்பவத்தை கண்டித்துள்ளது.
சட்டத்தை தங்களின் கைகளின் எடுத்துக் கொண்டுள்ள இச்செயலுக்கு எதிராக போலீஸார் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அது வலியுறுத்தியது.
சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடுவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தெரிவித்தார்.
எந்த இடிப்பு நடவடிக்கையும் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் மட்டுமே நடக்க வேண்டும், தனிநபர்கள் மூலம் அல்ல; எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரத் தரப்பை அவர் கேட்டு கொண்டார்.
இதனிடையே, மலேசிய புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய, தாவோ மத ஆலோசனை மன்றம் (MCCBCHST), பிரதமரின் அறிவுறுத்தல் மிகப் பொதுவானது என்றும், எல்லா வழிபாட்டுத் தலங்களுக்குமே அது பொருந்தும் என்ற அர்த்தத்தை கொண்டு வரலாம் எனவும் கவலைத் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட எல்லா வழிபாட்டு இடங்களுக்கும் அவ்வுத்தரவு பொருந்துமா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
காரணம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோட்டப்புறங்களிலும், ஈய சுரங்கப் பகுதிகளிலும் கோயில்களையும் வழிபாட்டுத் தலங்களையும் நிர்மாணிக்க அனுமதியளிக்கப்பட்டது.
1957-ல் நாடு சுதந்திரமடைவதற்கு முன் ஊராட்சி மன்றங்களே கிடையாது; தேசிய நலச் சட்டமோ 1965-ஆம் ஆண்டில் தான் இயற்றப்பட்டது.
எனவே பல தசாப்தங்களாக உள்ள வழிபாட்டுத் தலங்களை நடப்புச் சட்டத்தின் கீழ் _’haram’_ என வகைப்படுத்துவது நியாயமல்ல என அம்மன்றம் கூறிற்று.



