
வாஷிங்டன், ஆகஸ்ட்-17- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கும் சாத்தியத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப நிராகரித்துள்ளார்.
தற்போது கூடுதல் வரி விதித்தால் அது அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். எனவே இப்போதைக்கு எந்த முடிவும் இல்லை; இரண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகே எதுவும் தெரிய வரும் என்றார் அவர்.
இவ்வேளையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரியால், மோஸ்கோவிலிருந்து எண்ணெய் வாங்குவதையே இந்தியா நிறுத்தி விட்டதாகவும் ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
அவரின் இப்பேச்சு இந்தியாவுக்கே அதிர்ச்சியாக உள்ளது. காரணம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக புதுடெல்லி இதுவரை எந்த இடத்திலும் கூறவில்லை.
அதற்குள் முந்திக் கொண்டு ட்ரம்ப் பேசியிருப்பது இந்தியாவை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்குக் கூடுதலாக 25% வரி விதிப்பதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதனால் அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்த வேண்டிய வரி விகிதம் 50%-டாக உயர்ந்தது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
எனினும் அறிவித்தபடி ஆகஸ்ட் 27 முதல் கூடுதல் வரி அமுலுக்கு வருமென வாஷிங்டன் அறிவித்துள்ளது.