மோஸ்கோவ், நவம்பர்-16 – ரஷ்யாவில் YouTube சேவை மந்தமாகி வருவதோடு அடிக்கடி தடைப்படுவதாக திரையரங்க அதிபர்கள் தம்மிடம் நேரில் புகாரளித்திருப்பதால், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உறுதியளித்துள்ளார்.
அதிபர் மாளிகையான Kremlin அதனை அறிவித்தது.
ரஷ்ய அரசாங்கத்திற்கு பாதகத்தைக் கொண்டு வரக் கூடிய உள்ளடக்கங்களை அந்நாட்டு மக்களின் கண்களில் படாதவாறு பார்த்துக் கொள்வதற்காகவே, YouTube சேவைக்கு திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக நீண்ட காலமாகவே அங்கு குற்றச்சாட்டு நிலவுகிறது.
ஆனால் அதனைத் திட்டவட்டமாக மறுக்கும் மோஸ்கோவ், உண்மையில் கூகுள் தனது கருவிகளை மேம்படுத்தத் தவறியதே அதற்குக் காரணம் என கூறுகிறது.
ரஷ்யாவின் அக்குற்றச்சாட்டை அந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமோ அல்லது நிபுணர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே சமயம் ரஷ்யாவின் சட்டத்திட்டங்களுக்கு கூகுள் கட்டுப்படத் தவறியதும் ஒரு காரணம் என்பதை Kremlin பேச்சாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.
அது குறித்து கூகுள் இன்னும் கருத்துரைக்கவில்லை.
உண்மைக்குப் புறம்பானவை என ரஷ்யா கூறிக் கொள்ளும் உள்ளடக்கங்கள், குறிப்பாக யுக்ரேன் போர் தொடர்பான வீடியோக்களை நீக்க மறுத்து வருவதால் YouTube-பும் மற்ற சமூக ஊடகங்களும் கடந்த சில ஆண்டுகளாகவே ரஷ்யாவில் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றன.
ஒவ்வொரு நாளும் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் YouTube-பைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.