ராணுவ முகாம்களில் வீடியோ பொழுதுபோக்கு கலாச்சாரம் விசாரணை தொடங்கியது

கோலாலம்பூர், டிச 5- ராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள், பொழுதுபோக்குக்காக வெளியாட்கள் அனுமதியின்றி நுழைவது மற்றும் சிறு அளவிலான மதுபானங்கள் விற்பனை செய்யும் மையங்கள் இருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து உட்கட்ட விசாரணை நடத்த மலேசிய ஆயுதப்படைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த விவகாரங்களை முழுமையாகச் சரிபார்க்க உடனடி உட்கட்ட விசாரணையை நடத்த மலேசிய ஆயுதப் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தற்போதைய விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் சட்டங்களின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித இணக்கப் போக்குமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சு எச்சரித்தது. கட்டொழுங்கு , தொழில் நிபுணத்துவம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மலேசிய ஆயுதப் படைகளின் உண்மையான கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நடைமுறைகளை குற்றச்சாட்டுகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அது கூறியது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள், சுபாங் விமானப்படை தளம் உட்பட ராணுவ அதிகாரிகளிடையே “பொழுதுபோக்கு கலாச்சாரத்தை” காட்டுகின்றன.



