
கோலாலம்பூர், நவம்பர்-27 – இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லா எனும் கே. பத்மநாதன், 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் கடைசிக் குழந்தையை கடத்திச் சென்ற இடம் குறித்து ‘யூகமான மற்றும் பயனற்ற’ விசாரணைகள் நடத்தப்படுவதாக, அவரின் வழக்கறிஞர் போலீஸாரை விமர்சித்துள்ளார்.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலின் கருத்துக்கள் “மிகவும் தொந்தரவாகவும்” கவலையளிக்கும் வகையிலும் இருப்பதாக ராஜேஷ் நாகராஜன் கூறினார்.
BUDI 95 மற்றும் SARA போன்ற அரசாங்க உதவிகளைப் பெற “வேறு யாரோ” ரிடுவானின் அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற ரீதியில் காலிட் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஆதாரங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, ரிடுவானின் அடையாளத்தை வேறு யாரோ பயன்படுத்தியிருக்கலாம் என்று IGP இப்போது யூகிக்கிறார்; இதன் மூலம் இதுவரை எந்தவொரு முறையான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுவதாக” ராஜேஷ் கூறினார்.
“பார்க்கப் போனால் CCTV காட்சிகள் மற்றும் பரிவர்த்தனை பதிவுகளைச் சரிபார்ப்பது போன்ற அடிப்படை நடவடிக்கைகள் எப்போதோ முடிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.
ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப ரிடுவான் அப்துல்லாவைத் தேடி கண்டுபிடித்து, மகள் பிரசன்னா டீக்ஷாவை தாயிடம் ஒப்படைக்க போலீஸ் கடப்பாடு கொண்டிருப்பதாக IGP நேற்று கூறியிருந்தார்.



