
ரொம்பின், ஜனவரி 27 – பஹாங் ரொம்பின் Kampung Selendang பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை புலி கால்நடைகளையே தாக்கியிருந்தாலும், மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் சுமார் 4,500 மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் வழக்கமாக செம்பனைத் தோட்டங்களில் சுதந்திரமாக மேய விடப்படுகின்றன.
கடந்த வாரம் Kampung Selendang Tiga காட்டு பகுதியில் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான PERHILITAN ஒரு வலையை அமைத்து, புலியை பிடிக்க முயன்றுள்ளனர். அந்த வலையை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. புலிகள் எண்ணிக்கை, அவற்றின் உடல் நிலை மற்றும் நடமாட்டப் பாதைகளை அறிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புலிகளை பார்த்ததாக சில கிராமவாசிகள் கூறி வரும் நிலையில், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லவும், தோட்டங்களில் வேலை செய்யவும் தயங்கி வருகின்றனர்.
இதையடுத்து, PERHILITAN அதிகாரிகள் இரவு நேரங்களில் மற்றும் காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



