
புத்ரா ஜெயா, ஜன 8 – இராணுவ கொள்முதல் குத்தகை தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, இராணுவத்தின் முன்னாள் தரைப்படை தளபதி இன்று முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரது முதல் மனைவிக்கு மூன்று நாட்களும், இரண்டாவது மனைவிக்கு ஆறு நாட்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன்று புத்ரா ஜெயாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கும் மனுவை சமர்ப்பித்த பின்னர் அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் இஸ்ரினி ஸக்கரியா ( Ezrene Zakariah ) பிறப்பித்தார்.
அவர்கள் இன்று காலை 10 மணியளவில் இரண்டு MACC வாகனங்களில் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
நேற்று, பிற்பகல் 3 மணிக்கு MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரு நிறுவனத்தை வைத்திருக்கும் கணவன் மற்றும் மனைவியும் இந்த வழக்கு விசாரணையில் உதவுவதற்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் வழக்கு விசாரணையில் உதவுவதற்காக இதுவரை ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



