
ஷா ஆலாம், மார்ச்-1 – பி.கே.ஆர் கட்சியின் தொகுதி அளவிலான நிர்வாகத்தில் எந்தவொரு தனி இனத்தின் ஆதிக்கமும் இருக்கக் கூடாது.
மாறாக, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சிக் கோட்பாடுகளுக்கு ஏற்ப, அனைத்து இனங்களும் நிர்வாகத்தில் பிரிதிநிதிக்கப்பட வேண்டும்.
பி.கே.ஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனை வலியுறுத்தியுள்ளார்.
சில தொகுதிகளில் 20 விழுக்காடு சீனர்களும் 10 விழுக்காடு இந்தியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்; மற்ற தொகுதிகளில் அவர்கள் அறவே இல்லாமல் கூட இருக்கலாம்.
எனவே, கட்சி அமைப்பு விதிகளுக்கு ஏற்ப, இது போன்ற அம்சங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றார் அவர்.
ஷா ஆலாமில் நேற்றிரவு சிலாங்கூர் பி.கே.ஆர் ஆண்டு பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.
கட்சிப் பதவிகளை அடைந்தால் அரசாங்கப் பதவிகளைப் பெறலாம் என்ற எண்ணமும் கூடாது என உறுப்பினர்களை அவர் நினைவுறுத்தினார்.
மாறாக, சொந்த பலம், கொள்கை, மக்களுக்கும் கட்சிக்கும் சேவையாற்றும் தகுதி அடிப்படையில் போட்டியைச் சந்திக்க வேண்டுமென்றார் அவர்.
பி.கே.ஆர் கட்சித் தேர்தல்கள் வரும் மே மாதம் நடக்கின்றன.