
காஜாங், ஆகஸ்ட் 1 – கடந்த புதன்கிழமை காஜாங்கிலுள்ள அங்காடி ஒன்றில் வகுப்புத் தோழர்களை அடித்து தாக்கிய படிவம் 1 பயிலும் 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சனைகளால் மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
பாதிக்கப்பட்டவரை இரண்டு மாணவர்கள் குத்தி அறைந்துள்ளனர் என்றும், மேலும் இரு மாணவர்கள் கைபேசியில் சம்பவத்தைப் பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்றும் அறியப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த அடுத்த நாளில் கைது செய்யப்பட்ட அந்த நான்கு மாணவர்களும் தற்போது இரண்டு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகளிலும் காவல்துறை ஒருபோதும் சமரசம் செய்யாது என்று காவல்துறை தரப்பு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.