
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; WHO தகவல்
டாக்கா, பிப்ரவரி-7,
வங்காளதேசத்தில் நிப்பா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார நிறுவனமான WHO உறுதிச் செய்துள்ளது.
மரணமடைந்தவர் நடுத்தர வயது பெண் ஆவார்.
கடந்த மாத இறுதியில் அப்பெண்ணுக்கு காய்ச்சல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டன.
மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை வங்களாதேச சுகாதார அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
எனினும் இதுவரை புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என WHO தெரிவித்தது.
நிப்பா வைரஸ் பொதுவாக வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவும், சில சமயங்களில் மனிதரிலிருந்து மனிதருக்கும் பரவக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
என்றாலும் உலகளவில் நிப்பா வைரஸ் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளது என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் WHO கூறுகிறது.
எனவே பொது மக்கள் தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ள வேண்டாம் என்றும், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



