வங்காளதேச வன்முறையில் மலேசியா மௌனம்; நடவடிக்கை எடுக்க செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்

கோலாலாம்பூர், ஜனவரி-5,
வங்காளதேச இந்துக்கள் மீது தொடரும் கொடூர வன்முறையை கண்டு மலேசியா மௌனமாக இருப்பது சரியல்ல என, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா, கடந்த காலங்களில் பொது மக்கள் துன்பம் மற்றும் மனிதநேய மீறல்கள் தொடர்பான அனைத்துலகப் பிரச்னைகளில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அந்தக் கொள்கைகள் நிபந்தனைகளுடன் இருக்கக்கூடாது அல்லது தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
கூட்ட வன்முறையில் பலர் குத்திக் கொல்லப்பட்டு, உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவம், அந்த வங்காள விரிகுடா நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முற்றிலும் சீர்கெட்டுள்ளதை காட்டுகிறது.
எனவே, மலேசியா மனிதநேய மதிப்புகளை நிலைநிறுத்தும் நாடு என்பதால், இத்தகைய சம்பவங்களில் மௌனம் காக்காமல், சட்டம் மற்றும் மனித உயிரின் புனிதத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என அறிக்கை வாயிலாக சிவராஜ் கேட்டுக் கொண்டார்.
மௌனம் வன்முறையை மீண்டும் நிகழச் செய்கிறது என நினைவுறுத்திய அவர், மனித உயிரை பறிக்க எந்தக் கோபத்தையும் குற்றச்சாட்டையும் நியாப்படுத்த முடியாது என்றார்.



