
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 23 – வங்சா மாஜுவில் நடைபெற்ற இரவு நேர அமலாக்க நடவடிக்கையின் போது, மூன்று உணவகங்களை மூடுமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL உத்தரவிட்டுள்ளது.
ஜாலான் கோம்பாக், ஜாலான் செங்கல் செலாத்தான், பிளாட்டினம் வாக், ஜாலான் டானாவ் நியாகா 1, தாமான் கோப்பெராசி போலிஸ் ஃபேஸ் 1, டேசா மெலாவத்தி, டயமண்ட் சதுக்கம், ஜாலான் உசாஹவான் 7 மற்றும் கம்புங் பாடாங் உள்ளிட்ட பல இடங்களில் 32 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சோதனையில் சுகாதார மற்றும் உரிம விதிமுறைகளில் பல மீறல்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் மூன்று வளாகங்களுக்கு மூடல் உத்தரவும், 44 சமன்களும் வழங்கப்பட்டன.
உரிமையாளர்கள், தொழிலாளர்கள் டைபாய்டு தடுப்பூசி எடுக்காதது, உணவு கையாளும் பயிற்சிகளில் பங்கேற்காதது, கிரீஸ் பொறிகள் பொருத்தப்படாதது, சமையலறை மற்றும் சேமிப்புப் பகுதிகளில் எலி தொல்லைகள் மற்றும் கரப்பான் பூச்சி எச்சங்கள் ஆகியவை கண்டறியப்பட்ட குற்றங்களாகும்.
மேலும், சமையலறை தரைகள் மற்றும் சுவர்கள் அழுக்கு படிந்து இருந்ததெனவும், நடைபாதையில் மேசைகள் மற்றும் நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்ததோடு செல்லுபடியாகும் வணிக உரிமம் இல்லாமலும் வணிகங்கள் செயல்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்ட சுகாதாரத் தரங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துவதற்காக இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று DBKL தெரிவித்துள்ளது.