வட்டிக்கு பணம் வாங்கிய தந்தை புது மனைவியுடன் தலைமறைவு இரு சகோதரிகளுக்கு வட்டி முதலைகள் நெருக்கடி

கோலாலம்பூர், நவ -10,
தங்களது தந்தை புது மனைவியுடன் ஓடிப்போனதை்த தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற 72,000 ரிங்கிட் கடனை செலுத்தும்படி வட்டி முதலைகளின் நெருக்குதலுக்கு இரு சகோதரிகள் உள்ளாகியுள்ளனர். தங்கள் தந்தையின் கடனை அடைக்க அவர்களை மிரட்டுவதற்காக வட்டி முதலைகள் ஜோகூரில் உள்ள தனது உடன்பிறந்தவர்களின் கடையில் சிவப்பு வண்ணப்பூச்சை வீச குண்டர்களை அனுப்பியதாகக் கோவ் ( Khow) என்று கூறிக்கொண்ட
37 வயதுடைய பெண் வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பின் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக தனது கடையை கட்டாயமாக மூட வேண்டிய சூழ்நிலைக்கு தனது சகோதரி உள்ளானதாகவும் அந்த பெண் கூறினார்.
ஜூலை மாதத்திலிருந்து எங்கள் தந்தையின் கடனை அடைக்க வட்டி முதலைகள் எங்களைத் தேடி வருகிறார்கள், ஆனால் நாங்கள் அவரை அரிதாகவே தொடர்பு கொள்ள முடிகிறது. அதுவும் அவர் எங்களிடமிருந்து கடன் வாங்க வரும்போது மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது என அப்பெண் தெரிவித்தார். என் தந்தையும் அவரது புது மனைவியும் அடிக்கடி வட்டி முதலைகளிடம் கடன் வாங்குகின்றனர். இதற்கு முன் அவர் வாங்கிய 100,000 ரிங்கிட் கடன் தொகைக்கான பணத்தை செலுத்துவற்கு நாங்கள் உதவியுள்ளோம். எனினும் வட்டி முதலைகள் தொடர்ந்து கடனை செலுத்தும்படி எங்களுக்கு நெருக்குதல் அளித்து வருவதால் இந்த விவகாரத்தை ம.சீ.ச பொதுச் சேவை மற்றும் புகார் பிரிவின் தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங்கின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என அந்த பெண் கூறினார் . இதனிடையே வட்டிக்கு கடன் வழங்கியோர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம்தான் தொடர்பு கொண்டு கடனை வசூலிக்க வேண்டுமே தவிர அவர்களது பிள்ளைகளிடம் அல்ல என மைக்கல் சோங் ம.சீ.ச தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்



