வணிக குற்றங்கள் 81.6% ஆக உயர்வு; RM3.6 பில்லியன் இழப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 14 –
நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மொத்தம் 52,000 வணிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் சுமார் 3.6 பில்லியன் ரிங்கிட் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ காளிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு புள்ளி விபரங்களைக் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு வணிக குற்ற வழக்குகள் 81.6 சதவீதம் அதிகரித்துள்ளன.
அவற்றில் ஆன்லைன் மோசடிகள், குறிப்பாக ‘லவ் ஸ்காம்’, போலியான முதலீட்டு திட்டங்கள் போன்றவை மொத்த வழக்குகளில் 80 சதவீதம் ஆகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசு வணிக குற்றங்களை முக்கிய பிரச்சினையாகக் கருதி, வணிக குற்றப்புலனாய்வு துறை (CCID) தலைமையில் தேசிய மோசடி எதிர்ப்பு மையத்தை (NSRC) வலுப்படுத்தியுள்ளது.
இந்த மையம் கடந்த 2022-ல் தொடங்கப்பட்டதிலிருந்து செப்டம்பர் வரை 266,000க்கும் மேற்பட்ட அழைப்புகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
காளித் மேலும் கூறியதாவது, இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 21,000 பேர் கைது செய்யப்பட்டு, 14,000க்கும் மேற்பட்ட குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், கண்காட்சிகள், உரைகள், ஊடக ஒத்துழைப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. இது மக்கள் விழிப்புணர்வை உயர்த்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.