
கோலாலாம்பூர், ஏப்ரல்-21-கோலாலம்பூரில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைச் சிக்கல்களுக்கு மத்தியில், அடுக்குமாடி குடியிருப்பொன்றின் வரவேற்பறையில் கூடாரங்களை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார் ஒரு வீட்டு உரிமையாளர்.
வைரலான புகைப்படங்களில், ஒரு சிறிய அறைக்குள் பல கூடாரங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
அவைப் பார்ப்பதற்கு, தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் உள்ள கூடாரங்கள் போல உள்ளன.
ஒரு கூடாரத்திற்கு மாதம் 400 ரிங்கிட் வாடகை வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் அந்த உரிமையாளர் மாதம் சுமார் 2,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
போதிய இடவசதி இல்லாத சூழலில், குறைந்த வருமானம் பெறுபவர்களைக் குறிவைத்து இத்தகைய மனிதாபிமானமற்ற முறையில் அறைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இவரின் இச்செயல் சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சுகாதாரமற்றது மட்டுமல்லாமல், தீ விபத்து போன்ற அவசரக் காலங்களில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என வலைத்தளவாசிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், நகரப் பகுதிகளில் வாடகை உயர்வைக் கட்டுப்படுத்தவும், இத்தகைய ‘கூண்டு வீடுகள்’ அல்லது கூடார வாடகைகளைத் தடுக்கவும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குறைந்த வாடகைக்கு ஆசைப்பட்டுப் பொது மக்களும் இத்தகைய பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும் என பலர் அறிவுறுத்தினர்.



