
கோலாலம்பூர், மார்ச்-5 – SOSMA சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்படுவோரை ஜாமீனில் எடுக்கவே முடியாது என்ற சட்டப்பிரிவை, அரசாங்கம் ஆராய்கிறது.
அவர்களை ஜாமீனில் விடுவிக்கும் அதிகாரத்தை நீதிமன்றத்திடமே திரும்ப ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய அச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களில் 73 குற்றங்களும் ஆராயப்படுவதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
SOSMA சட்டத்தை மேம்படுத்துமாறு அமைச்சரவை விடுத்துள்ள உத்தரவுக்கு ஏற்ப அது அமைவதாக அவர் சொன்னார்.
காலத்திற்கேற்ற வகையில் SOSMA சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் கடப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
SOSMA கைதிகள் ஒவ்வொருவரின் மனித உரிமையும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யுமென, ஊடகங்களுடனான நோன்புத் திறப்பு நிகழ்வில் சைஃபுடின் கூறினார்.
SOSMA சட்டம் குறித்து மக்கள் மத்தியில் குறிப்பாக இந்தியர்களிடயே நீண்ட காலமாகவே பெரும் அதிருப்தி நிலவுகிறது.
மனித உரிமை அமைப்புகளும் அச்சட்டம் குறித்து ஆட்சேபம் தெரிவித்து வரும் நிலையில், மடானி அரசாங்கம் தற்போது மறு ஆய்வில் இறங்கியுள்ளது.