
கோலாலம்பூர், ஏப் 8 – வர்த்தகத்தை நடத்தும் தனிநபர்கள் இழப்புகளைச் சந்தித்தாலும், தங்களது வருமான அறிக்கையை உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவர்களில் பலர் இழப்புகளைச் சந்தித்தால் வருமான அறிக்கையை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள், இருப்பினும் அது தவறான கருத்து என கோலாலம்பூர் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் துணை தலைமை இயக்குநர் சைட் முகமட் சுக்ரி சைட் முகமட் கமில் ( Syed Mohd Sykree Syed Mohd Kamil ) சுட்டிக்காட்டினார்.
வர்த்தகத்தில் இழப்பு என்பது வழக்கமான ஒன்றாகும். லாபம் அல்லது இழப்பாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருமான அறிக்கையை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். வர்த்தகம் நஷ்டமாக இருந்தால் வருமான வரி விதிக்கப்படாது என்பதால் கவலைப்படாமல் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சைட் முகமட் சுக்ரி கூறினார்.
தொழில் நடத்தும் தனி நபர்களுக்கு சம்பளம் போன்ற பிற வருமானம் இருந்தால், ஒருங்கிணைந்த வருமானம் பாரம் B யில் கணக்கிடப்படும்.
இது தொழில் நடத்தும் தனிநபர்களுக்கான வருமான வரி பாரமாகும். எனவே, தொழில் நடத்துவோருக்கு வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என்று அவர் கூறினார்.
வர்த்தகத்தில் லாபம் அல்லது நஷ்டம் : B பாரத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்ட பெர்னாமா வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சைட் முகமட் சுக்ரி இதனை தெரிவித்தார்.