
குவாலா திரங்கானு, நவம்பர்-14,
UMT எனப்படும் மலேசியத் திரங்கானு பல்கலைக் கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிரம்பான் மந்தினைச் சேர்ந்த லோகேந்திரன் வேழவேந்தன், முக்கிய விருதுகளில் ஒன்றான துணை வேந்தர் தங்க விருதை வென்று பெற்றோருக்கு பெருமை சேர்த்தார்.
சுற்றுலா மேலாண்மைத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு, அதில் மிகச் சிறந்த அடைவுநிலையாக முதல் வகுப்புத் தேர்ச்சியை இவர் பதிவுச் செய்தார்.
இதையடுத்து பட்டமளிப்பு விழாவின் மாணவர் பிரதிநிதியாக உரையாற்றும் கௌரவமும் இவருக்குக் கிடைத்தது.
இச்சாதனைக்குப் பின்னால் இவர் கடந்து வந்த பாதைகள் கரடு முடனானவை…
வாழ்க்கையில் மகன் சாதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட இவரின் தந்தை வேழவேந்தன், வலிப்பு நோயால் கடந்தாண்டு காலமானார்; இது லோகேந்திரனுக்கு சொல்லொண்ணா துயரத்தை தந்து அவரை மனதளவில் வாட்டியது.
என்றாலும், தந்தை மற்றும் பாட்டியின் கனவுகளை நிறைவேற்ற, மனத்திடத்தோடு இவர் முன்னோக்கிப் பயணித்தார்.
வீட்டில் அம்மா, படித்துக் கொண்டே பகுதி நேரமாக வேலை செய்யும் அக்கா, படிப்பு முடிந்து வேலை செய்யும் 2 தம்பிகள் என சிறிய குடும்பம் இவருடையது.
நிதிப் பிரச்னைகளுக்கு மத்தியில் PTPTN கடனுதவியுடன் படித்து கற்றவர் வரிசையில் இன்று லோகேந்திரன் முந்தி நிற்கிறார்.
தங்க விருது கிடைத்தது வெறும் ஏட்டுக் கல்விக்காக அல்ல, புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கியதற்காக வணக்கம் மலேசியாவிடம் லோகேந்திரன் கூறினார்.
இதன் மூலம் தனது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துகொள்ளவும் வாய்ப்புகிடைத்தாக அவர் சொன்னார்.
எனவே, கல்வியா புறப்பாடமா என யோசிக்கும் பல்கலைக் கழகம் நுழையும் இந்திய மாணவர்களுக்கு இந்த அறிவுரையையும் அவர் வழங்கினார்…
வாழ்க்கையில் முன்னேற இலக்கு வைத்து விட்டால், அதனை நோக்கி கடுமையாக உழைத்திடல் வேண்டும்.
அப்படி உழைத்திட்டால் வெற்றி வெகுதூரமில்லை என்பதற்கு லோகேந்திரனும் ஒரு சான்று….



