
செர்டாங், ஜனவரி-31 – ஜனவரி 3-ஆம் தேதி பூச்சோங், தாமான் மாவாரில் நிகழ்ந்த வழிப் பறிக் கொள்ளைத் தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெட்டாலிங் ஜெயாவிலும், முதன்மை சந்தேக நபரும் மேலுமிருவரும் உள்நாட்டில் சுற்றுலா முடிந்து வரும் போது KLIA-விலும் கைதுச் செய்யப்பட்டனர்.
செர்டாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் AA.அன்பழகன் அதனை உறுதிப்படுத்தினார்.
சந்தேக நபர்களில் மூவருக்கு 21 பழையக் குற்றப்பதிவுகள் இருக்கும் நிலையில், மூவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதியானது.
அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி, மோதிரம், கை கடிகாரம், கைப்பேசிகள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தாமான் மாவாரில் மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரை, பின்னாலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் நெருங்கியுள்ளான்.
சட்டென கழுத்திலிருந்து 8,000 ரிங்கிட் மதிப்பிலான சங்கிலியைப் பறித்துகொண்டு அவன் ஓடி விட்டான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இக்கும்பல் கைதாகியிருப்பதன் மூலம் செர்டாங், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா ஆகிய 3 மாவட்டங்களில் 40,000 ரிங்கிட்டை உட்படுத்திய 11 கொள்ளைச் சம்பவங்களுக்கு போலீஸ் தீர்வு கண்டுள்ளது.