
கோலாலாம்பூர், ஜூலை-31- மக்கள் மத்தியில் இன்னமும் இனப் பாகுபாடு காணப்படுவது வருத்தமளிப்பதாக, பினாங்கு புக்கிட் பெண்டேரே நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட் கூறியுள்ளார்.
குறிப்பாக, வீடுகளை வாடகைக்கு விடும்போதோ, வேலை வாய்ப்புகள் குறித்து விளம்பரம் செய்யும் போது, குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே என குறிப்பிடுகிறார்கள்.
மலேசியர்கள் மத்தியில் ஒரு பழக்கமாகவே மாறிவிட்ட இதனை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது என, ஷெர்லீனா வலியுறுத்தினார்.
அதுவும், பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் இதுபோன்ற இனப் பாகுபாடுகள், பிரிவினைவாத்தைத் தூண்டி மக்களைப் பிளவுப்படுத்தி விடும்.
அரசியல்வாதிகளும் இவ்விவகாரத்தில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து, இனவாதங்களைத் தூண்டி விட்டு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
நாடாளுமன்றத்தில் பேசும் போது கூட, கவனமாகவும் பொறுப்போடும் அவர்கள் பேச வேண்டும்; மாற்றங்கள் தலைவர்களிடமிருந்து தொடங்க வேண்டும்.
இனப் பாகுபாட்டை விட்டொழிந்து அனைவரையும் அரவணைத்துச் செல்வதே மலேசியப் பண்பாடு என, வணக்கம் மலேசியாவிடம் ஷெர்லீனா கூறினார்.