
தெமர்லோ, அக்- 8,
வாடிக்கையாளர் போல் நடித்த பெண் ஒருவர் நகைக்கடை ஊழியரை நம்பவைத்து , காரில் உள்ள கைதொலைபேசியை எடுத்துவருவதாக கூறி 10,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலி மற்றும் மோதிரத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். ஒன்லைன்னில் பணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து தொலைபேசியை எடுக்கச் செல்வதாக நகைக்கடை ஊழியரை ஏமாற்றி அந்த நகைகளுடன் அப்பெண் தப்பிச் சென்ற சம்பவம் குறித்து அக்டோபர் 4 ஆம் தேதி மாலை சுமார் 5.40 மணியளவில் நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் இடைக்கால துணை கமிஷனர் முகமட் நசிம் பஹ்ரோன்
( Mohd Nasyim Bahron ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்தப் பெண், முன்னதாக சுமார் 19 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியையும் 4.35 கிராம் தங்க மோதிரத்தையும் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த பின் அவற்றை வாங்கிக் கொள்வதாகவும் அதற்கு பணம் செலுத்த தனது காரில் இருந்து தொலைபேசியை எடுக்கச் செல்வதாக கூறி கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கருப்பு பெரோடுவா பெஸ்ஸா காருக்கு சென்று முன் இருக்கையில் அமர்ந்து மற்றொரு நபருடன் தப்பிச் சென்றுள்ளார். அந்த வாகனம் போலி பதிவு எண்களைக் கொண்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் நசிம் தெரித்தார்.